மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது.
இதனையடுத்து, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், மேலதிக நீரை வெளியேற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (23) இரவு முதல் இன்று (24) பிற்பகல் வரை ஒரு வான் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்த கனமழையால் மற்றுமொரு வான் கதவும் தானாகத் திறந்துள்ளதாக நீர்த்தேக்கப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மத்திய மலைநாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.











