கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அங்கு தோசை சுட்ட காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தனிப்பட்ட விஜயமாக பெங்களூரு சென்றுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அங்குள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு உணவக ஊழியர்களுடன் இணைந்து தோசைக்கல்லில் தோசை ஊற்றி, நெய் மற்றும் பொடி தூவி தோசை சுட்டுள்ளார்.
பின்னர், தான் சுட்ட தோசையைத் தட்டில் எடுத்து வைத்து, அதனை அங்கிருந்த வாடிக்கையாளர்களுக்கு அவரே பரிமாறியுள்ளார்.
அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உணவகத்தில் தோசை சுட்டு, வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் இந்தக் காணொளியை உணவக நிர்வாகம் தமது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இக்காணொளி தற்போது இணையவாசிகளிடையே அதிக வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.











