மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் தனது முதற்கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
மதுராந்தகம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்றிய அவர், வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பண ஆசையால் அதிமுகவில் இருந்து தவெகவிற்குச் சென்று தேர்தலில் போட்டியிடுபவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வைப்புத்தொகையை (டெபாசிட்) இழக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் பேசி, அவரைப் பதவியை ராஜினாமா செய்ய வைத்து ஐந்து நிமிடங்களில் தவெகவில் இணைத்துக் கொண்டதாகக் குற்றம்சாட்டிய அவர், நாட்டில் எந்தவொரு கட்சியும் இதுபோன்ற இழிவான செயலைச் செய்ததில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தவெக தலைவர் விஜய்யின் கரூர் தேர்தல் பரப்புரையின்போது 40 பேர் பலியான சம்பவத்தைக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அப்போது தப்பி ஓடியவர் 70 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனச் சாடினார்.
கரூர் விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்தால் ‘தவெக’ என்ற கட்சியே இல்லாமல் போய்விடும் என்றும் அவர் தெரிவித்தார்.











