நாட்டில் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் நாடு தழுவிய சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் முன் அனுமதியோ அல்லது உடன்பாடோ இன்றி இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் ஊடாகவே தாம் அறிந்துகொண்டதாகவும், உற்பத்தியாளர்களிடமிருந்து இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், விலை உயர்வுக்கான காரணங்கள் மற்றும் விலைத் திருத்தம் தொடர்பான விளக்கங்களைக் கோரி, கோதுமை மாவு உற்பத்தியாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகாரங்கள் ஆணையச் சட்டத்தின் கீழ், கோதுமை மாவு குறிப்பிட்ட பண்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அதன் விலையை அதிகரிப்பதற்கு முன்னர் உற்பத்தியாளர்கள் ஆணையத்துடன் கலந்தாலோசித்து உடன்பாட்டுக்கு வரவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட விதிமுறைகளை மீறி அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.
உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைக்கும் பதில்களை ஆராய்ந்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.











