களிமண் உருவங்களில் ஊசிகளைச் செருகி போராட்டம் நடத்தும் சில குழுக்களின் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விமர்சித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய அறிவுஜீவிகள் அமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய அவர், இத்தகைய போராட்டங்களுக்குப் பின்னால் உள்ள மனநிலையைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத சில குழுக்கள், வெறுப்புப் பிரசாரங்களிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளிலும் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ருவான்வெலிசய ஸ்தூபியை மூழ்கடிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் தெளிவான அரசியல் நோக்கத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் எனக் கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்துவரும் போராட்டத்தின் பின்னணியிலேயே ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.











