நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் வடக்குக் கடற்கரைப் பகுதியில், பெண்களுக்கான புதிய மூத்தோர் ஹாக்கி லீக் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
‘நார்த் ஷோர் மகளிர் ஹாக்கி லீக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த லீக்கில், பாத்தர்ஸ்ட், மிராமிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
36 வயதான ஜூலி ஓலெட் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த முயற்சி, பெண்கள் ஹாக்கியில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான போட்டித்தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த நவம்பர் முதலாம் திகதி ஆரம்பமான இந்த லீக்கில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளன.
இந்தப் போட்டிகளுக்கு உள்ளூர் மக்களிடமிருந்து எதிர்பார்த்ததைவிட அதிக ஆதரவு கிடைத்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் போட்டிகளை நேரில் பார்வையிடுவதுடன், வர்த்தக நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் ஆதரவு வழங்கி வருகின்றன.
இதேவேளை, இளைய தலைமுறைப் பெண்களுக்கு முன்மாதிரியாக விளங்குவதுடன், பெண்கள் கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையைத் தொடர்ந்த பின்னரும் தங்களுக்குப் பிடித்த விளையாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதே இந்த லீக்கின் நீண்டகால இலக்காகும்.
எதிர்காலத்தில் இந்த லீக்கை விரிவுபடுத்தி, ஹாக்கி நியூ பிரன்சுவிக் அமைப்புடன் இணைந்து செயற்படவும் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.











