கியூபெக்கில் உள்ள எசிபித் (Essipit) இனு பழங்குடி இனத்தைச் சேர்ந்த 738 உறுப்பினர்களின் பழங்குடி அந்தஸ்தை, மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான விசாரணையின் போது, செனட் சபைக் குழுவின் முன்பு ஆஜரான மத்திய அரசின் துறைசார் உயரதிகாரிகள் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் செனட் சபையில் இடம்பெற்ற உணர்வுபூர்வமான விசாரணையில், தங்களது பாரம்பரிய அந்தஸ்து பறிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தினர்.
பாதிக்கப்பட்ட 738 பேரும் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்டின் கிசெரா (Christine Kichera) மற்றும் அடேலைட் மாட்சிராகன் (Adelaïde Matshiragan) ஆகிய இரண்டு இனு இனப் பெண்களின் வழிவந்தவர்கள் ஆவர்.
அக்காலத்தில் இப்பெண்கள் பழங்குடியல்லாத ஆண்களைத் திருமணம் செய்துகொண்டனர் என்ற காரணத்துக்காக, ‘இந்தியச் சட்டம்’ (Indian Act) விதிகளின்படி அவர்களின் சந்ததியினருக்குப் பழங்குடி அந்தஸ்து மறுக்கப்பட்டு வந்தது.
பின்னர், பாலின அடிப்படையிலான இந்த நீண்டகாலப் பாகுபாட்டைக் களைவதற்காகக் கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
இதன் மூலம் தகுதியடைந்த ஸ்டெ-ஜெலாய்ஸ் டுபே உள்ளிட்டோர் தாங்கள் இனு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அந்தஸ்துக்காக விண்ணப்பித்தனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு இனு சமூக அந்தஸ்து வழங்கப்பட்ட போதும், 2024-ஆம் ஆண்டில், அந்தஸ்து பெற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அவர்களின் தகுதி மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட இறுதி முடிவின் மூலம், அந்தப் பெண்களின் வழிவந்தவர்களின் பழங்குடி அந்தஸ்து உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











