கியூபெக் மாகாணத்தில் வீடற்ற நிலையிலுள்ள மக்களுக்கு உதவுவதற்காக 28 மில்லியன் டொலர் அவசர நிதியை மாகாண அரசு அறிவித்துள்ளது.
பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி சிறுபான்மை அரசை அமைத்த பின்னர் வெளியிடப்பட்டுள்ள முதலாவது முக்கிய அறிவிப்பு இதுவாகும்.
மொண்ட்ரியலில் உள்ள ‘அகெய்ல் பொன்னோ’ (Accueil Bonneau) வீடற்றோர் முகாமில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கியூபெக் முதல்வர் போல் செயிண்ட்-பியர் பிளாமொண்டன் (Paul St-Pierre Plamondon) இந்த அவசர நிதி ஒதுக்கீட்டை வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
எதிர்வரும் குளிர்காலத்தை முன்னிட்டு 16 பிராந்தியங்களில் அவசரகாலத் திட்டங்களை முன்னெடுக்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும், இதில் 18 மில்லியன் டொலர் மொண்ட்ரியல் பிராந்தியத்திற்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொண்ட்ரியால் நகரில் மட்டும் சுமார் 5,000 பேர் தங்குவதற்கு வீடின்றி வீதிகளில் வாழ்வதாகத் தெரிவித்த கியூபெக் முதல்வர், இந்த அவசர சூழ்நிலையை எதிர்கொள்ளவே இந்நிதி முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
வீடற்றோர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு, அத்துறைக்கான பொறுப்பு அமைச்சராக கியூபெக் முதல்வர் போல் செயிண்ட்-பியர் பிளாமொண்டன் தாமே பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.











