யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை, முள்ளி பகுதியில் வெள்ள அனர்த்தத்தைத் தடுப்பதற்காகத் தமது காணியூடாக வாய்க்கால் அமைக்க வழிசெய்த குடும்பம் ஒன்று தற்போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.
முள்ளி பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த வெள்ள அனர்த்தத்தைப் போக்குவதற்காகக் குறித்த குடும்பம் தமது காணியூடாக வாய்க்கால் அமைத்து வெள்ளநீரை வெளியேற்ற வழி செய்தது.
சீமெந்தினால் கட்டப்பட்ட அந்த வாய்க்கால் முழுமை பெறாத காரணத்தினால், அதனுள் தண்ணீர் தேங்கி நின்று தினமும் துர்நாற்றம் வீசுவதுடன் நுளம்புத் தாக்கமும் அதிகரித்துள்ளதாக அக்குடும்பம் தெரிவிக்கிறது.
இதுகுறித்து மானிப்பாய் பிரதேச சபை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் ஆகியவற்றுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், நேற்று டெங்கு நுளம்பு பரிசோதனைக்காக அந்த வீட்டுக்குச் சென்ற பொது சுகாதார பரிசோதகரிடம் இது குறித்து முறையிட்டவேளை, “நீங்கள் எதற்காக உங்களது காணிக்குள் வாய்க்கால் அமைக்க இடம் கொடுத்தீர்கள், அரசாங்க காணியால் வாய்க்கால் அமைக்க விட்டிருக்கலாம் தானே. தேவையில்லாமல் உங்களது காணியைக் கொடுத்துள்ளீர்கள். இது குறித்து எமக்குத் தெரியாது” என அவர் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்ததாக அக்குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அந்த வாய்க்காலிலேயே டெங்கு நுளம்பு பரவுவதாகவும், அதனைக் கண்காணிக்காது காணியைப் பரிசோதிப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இனிமேல் வாய்க்கால் பிரச்சினையைச் சீர் செய்யாமல் டெங்கு நுளம்பு பரிசோதனைகளுக்காக வீட்டுக்கு வரவேண்டாம் எனவும், இதற்கு உரிய தீர்வு வழங்காவிட்டால் வாய்க்காலைத் தாம் மூடப்போவதாகவும் அக்குடும்பத்தினர் கவலையுடன் குறிப்பிட்டுள்ளனர்.











