சிங்கராஜ வனப் பகுதியில் சட்டவிரோதமாகப் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனங்களைச் சேகரித்த மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டுகளுக்காக நான்கு சீனப் பிரஜைகளுக்கு மொத்தமாக 76.4 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 23ஆம் திகதி களுவான நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள், 143 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, களுவான நீதவான் டி.எம். யசஸ்திரி பிரியங்கிகா திசாநாயக்க (D.M. Yasasthri Priyangika Dissanayake) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமான சிங்கராஜ வனப் பகுதியின் இடையக மண்டலத்தில், பூச்சிகள் மற்றும் ஊர்வன உள்ளிட்ட 41 குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட விலங்குகளைச் சட்டவிரோதமாகப் பிடித்தமை மற்றும் வைத்திருந்தமை ஆகியவை இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்கிய இந்த நான்கு சீனப் பிரஜைகளும், இலங்கையைத் தாயகமாகக் கொண்ட இனங்கள் உட்படப் பூச்சிகளையும் ஊர்வனவற்றையும் வனப் பகுதியின் இடையக மண்டலத்தில் சேகரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நவம்பர் 9ஆம் திகதி வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். உதவலவ தேசியப் பூங்காவின் பனஹடுவ பாதுகாப்பு அலுவலகத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் நவம்பர் 9ஆம் திகதி களுவான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள், இன்றைய விசாரணை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.











