இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை, கட்டப்பிராயில் அமைந்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இரு கட்சிகளும் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் செயற்படுவது, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகப் பொதுமக்களின் பங்கேற்புடன் போராட்டமொன்றை முன்னெடுப்பது, வடக்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறிப்பாக, உள்ளூராட்சி மன்றங்களில் இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் நலன்களை முன்னிறுத்தி எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன.
அத்துடன், வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலும், தென்னிலங்கை அரசியல் நிலவரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.











