மொன்றியல் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சைனாடவுன்’ (Chinatown) பகுதியை மறுசீரமைக்கவும், அங்குள்ள பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் ‘வில்லே-மேரி’ (Ville-Marie) பெருநகர நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, அப்பகுதியின் தூய்மையைப் பராமரிக்க பிரத்தியேகத் ‘தூய்மைப்படை‘ (Cleanliness Brigade) ஒன்று உடனடியாகக் களமிறக்கப்படுவதோடு, நகரின் எதிர்கால வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க ‘சைனாடவுன் கூட்டமைப்பு’ (Chinatown Alliance) உருவாக்கப்படுவதாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரசபையின் வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்கு மேலதிகமாகச் செயல்படவுள்ள இந்தச் சிறப்புத் தூய்மைப்படை, வாரத்தின் 7 நாட்களும் நாளொன்றுக்கு 10 மணிநேரத்திற்கு மேலாகச் செயல்படும்.
தெருக்கள் மற்றும் பொதுப் பகுதிகளைத் தொடர்ச்சியாகச் சுத்தப்படுத்துவதன் மூலம், குடியிருப்பாளர்கள், வணிகர்கள் மற்றும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு தூய்மையான, பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நீண்டகால நோக்கில், மொன்றியல் நகரிலுள்ள சைனாடவுன் பகுதியின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாத்து, அதன் பொருளாதார மற்றும் சமூக அமைப்பை வலுப்படுத்தும் வகையில் ‘நகர்ப்புற, பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம்’ (PDUÉS) தொடங்கப்பட்டுள்ளது.











