2026- 2027 PWHL பருவத்திற்காக புதிய அரங்கம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட அணியுடன் ஒட்டாவா சார்ஜ் களமிறங்குகிறது.
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வால்டர் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இலக்குடன் அணி தயாராகி வருகிறது.
இந்நிலையில் அணியின் தலைவியாக இருந்த பிரையன் ஜென்னர் மற்றும் முன்கள வீராங்கனை எமிலி கிளார்க் ஆகியோர் ஹாமில்டன் ஹவோக் அணியுடன் இணைந்துள்ளனர்.
அவர்களுடன் பெய்டன் ஹெம்ப் (Peyton Hemp), அலெக்சா வாஸ்கோ (Alexa Vasko), டெய்லர் ஹவுஸ் (Taylor House), ரோரி கில்டே (Rory Guilday) மற்றும் ஸ்டெபனி மார்க்கோவ்ஸ்கி (Stephanie Markowski) ஆகிய ஐந்து வீராங்கனைகளும் அணியை விட்டு விலகியுள்ளனர்.
முகாமில் உள்ள 28 வீராங்கனைகளில் 17 பேர் கடந்த பருவத்திலிருந்து திரும்பியுள்ளனர். பொது முகாமையாளர் மைக் ஹிர்ஷ்ஃபீல்ட் (Mike Hirshfeld), புதிய மற்றும் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அணியின் கட்டமைப்பு பரிச்சயம் சாதகமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு பருவங்களிலும் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த ஒட்டாவா, 2025இல் மினசோட்டா ஃப்ரோஸ்ட் (Minnesota Frost) அணியிடமும், கடந்த பருவத்தில் மொன்றியல் விக்டோயர் (Montreal Victoire) அணியிடமும் தோற்றது.
கோல்காப்பாளர்களான க்வின்னெத் பிலிப்ஸ் (Gwyneth Philips) மற்றும் சன்னி அஹோலா (Sanni Ahola) இருவரும் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். கடந்த பருவத்தில் .931 சேவ் சதவீதம் மற்றும் மூன்று ஷட்அவுட்களுடன் சிறப்பாகச் செயல்பட்ட 26 வயதான பிலிப்ஸ், பெண்கள் உலக சாம்பியன்ஷிப்பில் அமெரிக்கா தங்கம் வெல்லவும் பங்களித்தார்.
சீசனின் தொடக்கத்திலிருந்தே வலுவாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்காக அவ்வப்போது விலகியிருந்த தலைமைப் பயிற்சியாளர் கார்லா மெக்லியோட் (Carla MacLeod), தற்போது நலமுடன் இருப்பதாகவும் புதிய பருவத்திற்குத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
TD பிளேசில் மூன்று பருவங்கள் விளையாடிய ஒட்டாவா சார்ஜ், இனி ஒட்டாவா செனட்டர்ஸ் (Ottawa Senators) அணியுடன் இணைந்து கனேடியன் டயர் சென்டரில் (Canadian Tire Centre) விளையாடவுள்ளது.
திங்கட்கிழமை ஒன்டாரியோவின் அன்காஸ்டரில் டெத்ராய்ட் கிளட்ச் (Detroit Clutch) அணிக்கு எதிராகப் பயிற்சிப் போட்டியுடன் தொடங்கும் ஒட்டாவா, டிசம்பர் 6 அன்று டொரொண்டோ செப்டர்ஸ் (Toronto Sceptres) அணிக்கு எதிராக வழக்கமான பருவத்தைத் தொடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.











