கீரிமலை கற்குவாரியில் கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளுமாறு வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் உத்தரவிட்டுள்ள போதிலும், அவை இதுவரை மீள அள்ளப்படவில்லை என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன், இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீரிமலை பகுதியில் உள்ள கற்குவாரியில் அனுமதியின்றி பெருந்தொகையான கழிவுகள் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வலி. வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டதற்கு வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இது குறித்து வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், கழிவுகளை உடனடியாக மீள அள்ளுமாறு உத்தரவிட்டனர்.
எனினும், அந்த உத்தரவுக்கு அமைய சிறியளவிலான கழிவுகள் மட்டுமே மீள அள்ளப்பட்டதுடன், பெருந்தொகையான கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன.
தற்போது யாழ்ப்பாணத்தில் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கற்குவாரி கிடங்குகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இவ்வாறு தேங்கியுள்ள நீரில் கழிவுகளும் கலந்துள்ளதால், அப்பகுதியைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களின் நிலத்தடி நீர் மாசுபடும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கீரிமலை கற்குவாரியில் கொட்டப்பட்ட கழிவுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக, விசேட விசாரணைக்குழு ஒன்றினை அமைத்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.











