முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஆகியன இணைந்து நடத்தும் ‘பாரம்பரியக் கலைகளின் சங்கமம் – முல்லைமோடி 2026’ மற்றும் ‘பாரம்பரிய உணவுகளின் சங்கமம் – முல்லைச்சுவை 2026’ ஆகிய நிகழ்வுகளின் முதலாம் நாள் நிகழ்வு முல்லைத்தீவு கடற்கரையில் ஆரம்பமானது.
விருந்தினர்கள் குடமூதற்கும்மி கிராமிய நடனத்துடன் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரம்பரிய உணவுகளின் சங்கம நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், முல்லைமணி வே.சுப்பிரமணியம் எழுதிய ‘பண்டாரவன்னியன்’, ‘வன்னியர் திலகம்’ ஆகிய நூல்களும், என்.எஸ்.மணியம் எழுதிய ‘முல்லைமோடி – பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்து’ என்ற நூலும் மீள்பதிப்புச் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் 60 வயதுக்கு மேற்பட்ட பத்து கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்பு அரங்க நிகழ்வுகளாக மல்லாவி தமிழ்த்தாய் கலாமன்றம் வழங்கிய காத்தவராயன் கூத்தும், கற்சிலைமடு பரந்தாமன் நாடக கலாமன்றம் வழங்கிய பண்டாரவன்னியன் நாடகமும் மேடையேற்றப்பட்டன.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தனது மண்ணுக்கே உரித்தான தனித்துவமான கலைகளைப் பேணிப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் பெரிதும் துணைநிற்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், இயற்கை மற்றும் மனித வளங்களில் சிறந்து விளங்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமை அதிகமாகக் காணப்படும் மாவட்டமாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிலைமையை மாற்றச் சிறந்த வாய்ப்புக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை உணவுத் திருவிழாக்கள் ஊடாக மக்களிடம் கொண்டுசேர்ப்பதன் அவசியத்தையும், சுற்றுலாத்துறை மேம்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய.அநிருத்தனன், பிரதேச சபைகளின் தொழிலாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.











